Wednesday, August 10, 2011

அப்படித்தானிருக்கிறது...!

உச்சி வெய்யில்
தார்ச்சாலை
கானல் நீர்
தெரிந்தோ - தெரியாமலோ
அதிலொரு
பச்சிளங்குழந்தையின் பாதம்
அப்படித்தானிருக்கிறது
வாழ்க்கை தரும் ஒவ்வொரு அனுபவமும்.......!

Monday, August 8, 2011

என்றும் இணையா நதிக்கரைப்போல...!

இணைந்திருந்தேன்,
தாய், தந்தை மற்றும் சுற்றத்தோடு
விவரம் அறியா வயது வரை
பிரிய ஆரம்பித்தேன்,
விவரம் தெரிய ஆரம்பித்த வயதில்
முதன் முதல்
கல்விக்காக..!
பிறகு
வேலைக்காக / பிழைப்புக்காக..!
அடுத்து
மனைவி / மக்களுக்காக...!
கடைசியாக...,
இவர்களையும் பிரிந்தேன்
முன்னேற்றத்திற்காக ( என்ன முன்னேற்றமோ...!)...!
ஆக மொத்தம்,
என்றும் இணையா நதிக்கரை போலத்தான் போலிருக்கிறது
மனித வாழ்க்கையும்...!

Saturday, August 6, 2011

ஆட்சேபனையில்லை...!

ஆட்சேபனையில்லை,
மனம்
பிறழாமல் இருக்கும் போது
நம்மிடமிருந்து அடுத்தவர்களுக்கும்
அடுத்தவர்களிடமிருந்து நமக்கும் - கிடைக்காத
அன்பு, பாசம், கருணை, புரிதல் எல்லாம்
மனம்
பிறழும் போது தான் கிடைக்கும் என்றால்
ஆட்சேபனையில்லை
அப்படி இருப்பதில்...!

ஆசிர்வதிக்கப்பட்டவன்...!

உலகிலுள்ள
எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும்
சென்று கிடைக்காத நிம்மதி / சந்தோஷம்
உங்கள் குழந்தையின்
ஒரு கீற்று புன்னைகையில் கிடைக்கப்பெற்றால் / உணர முடிந்தால்
இவ்வுலகில் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நீ...!

Tuesday, July 5, 2011

அவ்வளவு உறுதியாக மறுக்க முடியாது...!

நான்
என்ன தான்
என் தாயை தெய்வமாக வணங்கினாலும்
சில (அல்ல) பல நேரங்களில்
மற்ற பெண்களும் ஒரு தாய் தான்
அல்லது
தாயாக போகிறவள் தான் என்பதை
மறந்து தான் போகிறேன் என்பதை - என்னால்
அவ்வளவு உறுதியாக மறுக்க முடியாது...!

Monday, July 4, 2011

தூண்டுதலால் - ஏதேதோ எழுதப்படுகிறேன்

நான்
ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன்
நாய் துரத்துமே யானால்...
அதேபோல் ,
கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன்
தூண்டப்படுவது தொடருமே யானால்....!


தனித்தன்மை...!

ஒரு ஆண்,
பெண் வேடம்
போடும் போதுதான் - தெரிகிறது
பெண்மையின் தனித்தன்மை
அந்த அழகு, நளினம், நெளிவு, சுளிவு, பாவம்...எல்லாம்...,

Sunday, July 3, 2011

அவன் இவன்...!

சற்றே,
அமைதியான - அழகான(மன்னிக்கணும்)
அடக்கமான ஒடிந்த தேகம்
கரைபவரோடு (காகம்)
போட்டி போட்டு அழகன்
பட்டம் பெற்றுவிட முடியும்
என்ற நம்பிக்கையான நிறம்
மற்றபடி
எல்லா பாகமும் ஏதோ ஊனம்
என்று சொல்லாத அளவிற்கு
கொஞ்சம் உருப்படியானவை
அடுத்தவர்களை
வெல்லும் அளவிற்கு செல்வம்
இல்லையென்றாலும்
அவர்களையும் கவரும் வகையில்
கொஞ்சம் சிறுமையானவன்
ஒரு
கண்ணில் வலி வந்தாலும்
மறு கண்ணில் நீர் வராது
என்று சொல்லுமளவிற்கு
கொஞ்சம் கடுமையான முகத்தையுடையவன்
அந்த கடுமையான முழு உருவத்தையுடைய
பாறையிலே நீர் சுரக்கும் போது
சற்றே, முயன்று
என்னுள்ளும் கொஞ்சம்
முகர்ந்து பாருங்கள் - சத்தியமா
உங்களின் முழு தாகத்தை தீர்க்க
நீர் கிடைக்காவிட்டாலும்
ஒரு முகராவது கிடைக்கும்...!

ஊரறியும்...!

வாழும் போது
நாம் ஊரறிய
வாழ்கிறோமோ இல்லையோ
ஆனால்
கண்டிப்பா ஓர் நாள் ஊரறியும்
போகும் போது...!

Saturday, June 25, 2011

நான் அவனுக்கும் ஒரு படி மேலே அதில்...!

பொதுவா அவன் தான்
நமக்கு கருணை காட்டனும்
ஆனால்,
என்னை இவ்வளவு
கஷ்ட படுத்தியும் என்னிடம்
குறையவில்லை அவனின் கருணை.
போடா போடா மன்னிச்சாச்சு போ...போ

Wednesday, June 22, 2011

கற்றுத் தரப்போவதில்லை........

வலிகளும் வேதனைகளும்
கற்றுத் தரும் பாடங்களைவிட
சுகங்களும் சௌகரியங்களும் - ஒரு போதும்
கற்றுத் தரப்போவதில்லை....

Saturday, March 19, 2011

யாருக்கு புலப்படும்...?

எவன் ஒருவனுக்கு,
சுவற்றில் அடித்த சுண்ணாம்பு
உதிர்ந்து ஆங்காங்கே குட்டி
தீவுகளைபோல இருப்பதில்
பல சித்திரங்களை/உருவங்களை
காண முடிகிறதோ/உருவாக்க முடிகிறதோ - அவனுக்கே
புலப்படும் இந்த வாழ்க்கை
ஏனென்றால், இந்த வாழ்க்கை
ஒரு கைதேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியம் அல்ல!
அது குழந்தையின் கிறுக்கல்கள்.......!

Monday, February 28, 2011

இருக்கும் ஒரு சாதனையின் தொடக்கம்.....

இன்று,
நான் தொடங்கும் ஒவ்வொரு பயணங்களும்
தோல்வியில் முடியலாம் - ஆனால்
நாளை எடுத்து வைக்கும்
ஒவ்வொரு காலடியின் முடிவுலும்
இருக்கும் ஒரு சாதனையின் தொடக்கம்.....

Sunday, February 27, 2011

என்னையும் அறியாமல்...!

எங்கேயாவது,
கணவன் - மனைவி இவர்களுக்கிடையில்
ஓர் குழந்தையை பார்க்க நேரிட்டால்
என்னையும் அறியாமல் - ஒரு சொட்டு கண்ணீர்
என் கண்களில்
காரணம்
நமக்கு இது பறிபோனதே என்ற ஆதங்கமா?
இல்லை
இவர்களுக்காவது நீடிக்கட்டும் என்ற வேண்டுதலா...?

Friday, February 25, 2011

உன் உதட்டோர மச்சம்...!

பிரம்மன்
தன் கையில் மீதமிருந்த
அழகை யெல்லாம் ஓருருண்டையாய்
உருட்டி வைத்த புள்ளி...

அப்படித்தாண்டி எனக்கும் உன் பிரிவு...!

நல்ல
பசியுள்ள ஒரு பச்சிலங்குழந்தை - தன்
தாயின் மார்பில் பால் குடித்துகொண்டிருக்கும்போது
திடீரென, அந்த தாய்
மாரடைப்பால் இறந்து போய் - பால்
சுரப்பது நின்று போனால்
எந்தளவுக்கு அந்த குழந்தையால்
அந்த நிலைமையை புரிந்துகொள்ளமுடியுமோ?
அப்படிதாண்டி,
எனக்கும் உன் பிரிவு...!

Thursday, February 24, 2011

நன்றாக நினைவிருக்குடி...!

என்றோ ஒரு நாள்,
நீ பள்ளிக்கு புறப்படும்போது
செலவுக்கு வேண்டுமென கைவிட்டு
என் சட்டைப்பையிலிருந்து
இருபது ரூபாய் எடுத்தது - உண்மையிலே
அன்று தான்
உணர்ந்தேன் நானும் சம்பாதிக்கிறேன்
என்னிடமிருந்தும் பறிப்பதற்கு (விளையாட்டாக)
ஒரு ஜீவன் இருக்கிறது என்று...,
ஏனென்றால்,
துணையோடு பிறந்தாலும் - தனியாகவே
வளர்ந்து - வாழ்ந்து - உழண்டு
கொண்டிருந்த என் மனதுக்கு இதமாய் இருந்தது
ஆனால்,
அன்றிலிருந்து இன்றும்
என் சட்டைப்பை திறந்தே இருக்கிறது
எடுக்கத்தான் ஆளில்லை...

Wednesday, February 23, 2011

யாரும் விதிவிலக்கல்ல

ஏறக்குறைய
எல்லா ஆண்களின் பார்வையும்
ஒரே மாதிரி தான் - முதன் முதலில்
ஒரு பெண்ணை பார்ப்பதில்
இதில்
யாராவது விதிவிலக்கா இருந்தால் உடனே
அவர்களெல்லாம் ராமனாக இருக்க முடியாது
ஒரு வேலை அவர்களுக்கு - எதிலும்
நாட்டம் இல்லாமல் இருக்கலாம்
குறிப்பாக அதில்....

Tuesday, February 22, 2011

புரிந்துணர்தல்...

என்னதான்
கட்டுப்பாடோடிருந்தாலும் -ஏதோ
ஒரு சில தருணங்களில்
அனைத்து நரம்புகளும் தூண்டப்பட்டு
நான் வெலியேற்றப்படுகிறேன்- அவன்
உள்ளே வருகிறான் - விளையாடுகிறான்
அது வெளியேருகிறது - மீண்டும்
நான் உள்ளே வருகிறேன்....